உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டி – இன்றைய டை பிரேக்கர் ஆட்டம் வெற்றியை தீர்மானிக்குமா!!


உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.


ஃபிடே சதுரங்க உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.


நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் இருவரும் 35 ஆவது நகர்வில் போட்டியை சமன் செய்ய ஒப்புக் கொண்டனர். எனவே நேற்று இரண்டாவது சுற்று நடைபெற்றது. இரண்டாவது சுற்று ஆட்டத்தின் 30 ஆவது நகர்வில் இருவரும் மீண்டும் சமன் செய்ய முன் வந்த நிலையில் இன்று டை பிரேக்கர் சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.




இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டம் டிராவில் முடிவுற்ற பின் ஃபிடே டிவி நிபுணரிடம் பேசிய மேக்னஸ் கார்ல்சன், நான் நல்ல உடல்நிலையில் இருக்கிறேன். ஆனால் இன்னும் எனக்கு நல்ல ஆற்றல் வேண்டும் என நினைக்கிறேன். நான் ஏற்கனவே நிறைய வீரர்களுடன் டை பிரேக்கரில் விளையாடி இருக்கிறேன். இன்று நல்ல நாளாக அமைந்தால் வெற்றி சாத்தியமாகும் என தெரிவித்தார்.


நேற்றைய போட்டிக்கு பின்னர் பேசிய பிரக்ஞானந்தா, “நான் மற்றும் கார்ல்சன் இருவரும் போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள ஒப்புக் கொண்டோம். நாளை டை பிரேக்கரில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தோம். என்னுடைய தாய் எனக்கும் எனது வெற்றிக்கும் தூணாக இருந்து வருகின்றார். இந்த போட்டிக்கு பின்னதாக எனக்கு உலக ரேபிட் டீம் செஸ் தொடர் இருக்கிறது, எனவே இடைவெளி இன்றி நான் அடுத்த போட்டிக்கு செல்கிறேன்” என தெரிவித்தார்.



இந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெறும் பட்சத்தில் உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை மிக இளம் வயதில் வென்றவர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன் உக்ரைன் வீரர் ரஸ்லன் போனோமரிவ் தனது 19 வயதில் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்து வருகிறது. உலக செஸ் தரவரிசையில் 29வது இடத்தில் உள்ள பிரக்ஞானந்தா கடந்த 10ஆம் தேதி தனது 18வது பிறந்த நாளை கொண்டாடினார்.




இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான பிரக்ஞானந்தா, இறுதி போட்டியிலும் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது.

Comments