மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரி மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

 மதுரை: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மணிப்பூர் வன்முறைக்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் என பலரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், மதுரை பெத்தானியபுரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் இளைஞரணி செயலர் கவிஞர் சிநேகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூரில் பாஜக அரசை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோஷமிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் காளி வேடம் அணிந்து அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் பங்கேற்றார். மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


சிநேகன் பேசும்போது, ''மணிப்பூரில் நீண்ட காலமாகவே பெண்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன என்ற அம்மாநில முதல்வரின் பேச்சு கண்டனத்துக்குரியது. மணிப்பூரில் மாநில அரசை கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்'' என வலியுறுத்தினார். இதனிடையே, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளுக்குள் சலசலப்பு ஏற்பட, அவர்களைச் சமாதானப்படுத்தச் சென்ற போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments