என்எல்சி சேதப்படுத்திய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

 என்எல்சி சேதப்படுத்திய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



என்எல்சியால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமைக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் உள்ளது. இங்கு நிலக்கரி 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை, கரிவெட்டி வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அதன்படி 2006-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி அன்று வளையமாதேவி கிராமத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் என்எல்சி நிறுவனம், இயந்திரங்களைக் கொண்டு நிலங்களை சமன்படுத்தியது. இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதி விவசாயிகளும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கினர்.

இதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அடுத்த நாள் காலை சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் சுரங்கத்திற்காக வாய்க்கால் மற்றும் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. இதற்காக 30-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்றன.

இன்னும் 2 மாதத்திற்குள் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யவுள்ள நிலையில், நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு கால்வாய் மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கியதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவிய நிலையில் பாதுகாப்புக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடங்களில் வாய்க்கால் வெட்டும் பணியின்போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்எல்சி நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் உரிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று என்.எல்.சி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்க என்எல்சி தவறிவிட்டது. அதில் பயிரிட்டது விவசாயிகளின் தவறு. இரு தரப்பும் 50:50 பொறுப்பாவார்கள். என்.எல்.சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இனி எந்த விவசாய பணிகளும் மேற்கொள்ளக்கூடாது. நில உரிமையாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது, அவ்வாறுசெய்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் அறுவடைக்கு பின்னர் நிலங்களை விவசாயிகள் ஒப்படைத்து விட வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க என்எல்சி நிறுவனம் ஒப்புதல் அளித்தது. இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெற்று கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என என்எல்சி நிறுவனம் தெரிவித்தது. மேலும் இழப்பீடு தொகையை சிறப்பு தாசில்தார் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் எனவும் கூறப்பட்டது.

Comments