பாத யாத்திரை இல்லை; பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை - பாஜக அரசு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனம்!

அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை இல்லை, குஜராத்திலும், மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


புதிதாக நியமிக்கப்பட்ட திமுக இளைஞரணி மாவட்ட – மாநில துணை அமைப்பாளர்களின் அறிமுகக் கூட்டம், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.





திமுக இளைஞரணி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:


கட்சி பணியிலும், ஆட்சி பணியில் உதயநிதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். படிக்க படிக்கத்தான் அடுத்தவர்க்கு எடுத்துச்சொல்லும் திறன் வரும். திராவிட இயக்க வரலாற்றை இளைஞர்களுக்கு சொல்லித்தர வேண்டும். மாணவர்கள், இளைஞர்களிடம் திமுக நம்பிக்கை அளித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக திமுகவை நோக்கி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


நமக்கு அடுத்தும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை எடுத்துச்சொல்லும் வாரிசுகளை உருவாக்கி கொண்டே இருக்கனும். வாரிசு , வாரிசு என்று திரும்ப திரும்ப ஏன் சொல்கிறேன் என்றால், நம் எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறார்களோ நாமும் அந்த ஆயுதத்தை தான் எடுக்கனும். கொள்கையை பேச நமக்கு எண்ணிக்கையை விட எண்ணங்கள் தான் முக்கியம்.


சமுக நீதியை இந்தியா முழுக்கவும் எடுத்துச் செல்லதான் INDIA கூட்டணி உருவாகியுள்ளது. INDIA என்கிற பெயரை கேட்டாலே சிலர் மிரளுகின்றனர், அலறுகின்றனர். பாட்னா கூட்டம், பெங்களூரூ கூட்டம் வெற்றி பெற்றதை கண்டு பிரதமரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.



மத்தியபிரதேசத்துக்கு போனாலும், அந்தமான் போனாலும் திமுகவை விமர்சிக்கிறார் பிரதமர். ஒரு குடும்பத்துக்காக ஆட்சி நடக்கிறதாம், கோடி கணக்கான குடும்பங்களை வாழவைத்த, வாழ வைத்துக்கொண்டிருக்கிற ஆட்சிதான் திமுக ஆட்சி. கொரோனா காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் முடங்கிய போது 4 ஆயிரம் ரூபாய் கொடுத்த ஆட்சி திமுக ஆட்சி.


இலவச பேருந்து பயணம், ஒரு கோடி மகளிருக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை, 18 லட்சம் மாணவ, மாணவியருக்கு காலை உணவு, 13 லட்சம் பேரின் நகைக்கடன் ரத்து, மக்களை தேடிச்சென்று மருத்துவம் பார்க்கும் திட்டம் என தமிழ் குடும்பங்கள் பயன் அடைவதற்கான குடும்ப ஆட்சி தான் இது.


மத்தியில் ஆட்சி இருப்பதால், தாங்கள் ஏதோ வெல்ல முடியாதவர்கள் போல் பயம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வருகிறது அல்லவா, அதனால் இனி மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழகம் வருவர். அமித்ஷா மத்திய அரசின் புதிய திட்டத்தை தொடங்கி வைக்க வந்தாரா? இல்லை ஏற்கனவே அறிவிச்ச மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க வந்தாரா? இல்லை. எதோ பாதை யாத்திரை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். அது பாதை யாத்திரை இல்லை, குஜராத்திலும் தற்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை இது.



2 மாசமா பற்றி எரியும் மணிப்பூருக்கு சென்று அமைதி யாத்திரை நடத்த முடிந்ததா? முடியலையே, அமைதியாக இருக்கிற தமிழகத்தில் கலவரம் ஏற்படாதா என்ற எண்ணத்தோடு பாதை யாத்திரை தொடங்க வந்துள்ளார். நேற்று திமுக குடும்ப கட்சி என பேசியிருக்கிறார். இது கேட்டு கேட்டு புளித்துபோன ஒன்று. நானும் எவ்வளவோ சொல்லீட்டேன் வேறு மாத்தி சொல்லுங்க என்று, பாஜகவில் எந்த தலைவரோட வாரிசும் அரசியல் பதவியில் இல்லையா? எல்லோரும் நாளை காலையே விலகிவிடுவார்களா? பாஜகவில் மாநில வாரியா பதவியில் உள்ள வாரிசுகளின் பட்டியலை நான் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் ஆகும். அதனால் வேறு எதாவது புதிதாக சொல்லுங்க அமித்ஷா அவர்களே.


இலங்கை பிரச்னையை பற்றி அமித்ஷா பேசியுள்ளார். தமிழ் மக்களின் ரத்த கரை படிந்த ராஜபக்சேவை 2014-ஆம் ஆண்டு பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தவர்கள் இலங்கை பிரச்னை பற்றி பேச உரிமை இருக்கிறதா? திடீரென அமித்ஷாவிற்கு மீனவர்கள் மீது பாசம் பொங்கியுள்ளது. காங்கிரஸ் காட்சி காலத்தில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கிய போது அன்றைய பிரதமர் வேட்பாளர் மோடி என்ன சொன்னார்? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர் ஒருவர் கூட இறக்கமாட்டார், குஜராத் மீனவர் ஒருவருக்கு கூட பாகிஸ்தானால் பிரச்னை வாராது என ராமநாதபுர கூட்டத்தில் சொன்னார்.


மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தங்கச்சி மட மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த ஆண்டு சென்னையில் பேசும்போது மோடி சொன்னார், 1600 மீனவர்கள் எங்களது ஆட்சியில் இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார். அப்படியென்றால் மோடி ஆட்சியில் 1600 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறாரா. 313 மீனவ படகுகள் விடுவிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்.அப்படியென்றால் அவரது ஆட்சியில் 313 மீனவ படகுகள் சிறைபிடிக்கப்பட்டது என்பதை மோடி ஒத்துக்கொள்கிறாரா? இப்படி தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது உள்துறை அமைச்சருக்கு தெரியுமா?


இதுமட்டுமில்லை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்தும் பேசியிருக்கிறார். நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அமித்ஷா அவர்களே குற்ற வழக்குகளில் தொடர்புடைய அமைச்சர்களெல்லாம் பிரதமரின் அமைச்சரவையில் தானே இருக்கிறார்கள். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருப்பது குறித்து கேள்வி கேட்கும் அமித்ஷாவிற்கு பிரதமர் மோடியிடம் இந்த கேள்வியை கேட்கும் தைரியம் இருக்கிறதா? வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் செந்தில்பாலாஜி வழக்கில் விரிவாக பேசமுடியாது.


பாஜக தனது அரசியல் எதிரிகளை சலவை செய்யும் வாஷிங் மிஷினாக அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. நாடு முழுக்க தெரிந்த ரகசியம் இது. விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்கட்சியினரை மிரட்டுவது, பிறகு அவர்களை பாஜகவில் சேர்த்து பரிசுத்தமானவர்களாக அறிவிப்பது. இதுதான் பாஜகவின் மோசமான அரசியல் பாணியாக இருக்கிறது. நாட்டில் அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்கு தகுதியானவர்களே இல்லையா? இந்த கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.


மத்திய பாஜக அரசின் ஆட்டங்களெல்லாம் இன்னும் சில மாதங்கள் தான். ஜனநாயகம் , சமூக நீதி, மதச்சார்பின்மை, அரசியல் சட்டம் என அனைத்தையும் அழிக்க முயற்சி செய்யும் பாஜக ஆட்சி முடிய போகிறது. INDIA-விற்கு விடியல் பிறக்க போகிறது. தமிழை, தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றால் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பை காக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற INDIA-விற்கு வாக்களியுங்கள் என்பதே நமது தேர்தல் முழக்கமாக இருக்க போகிறது. இவ்வாறு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

Comments