நெய்வேலியில் வெடித்த பாமக போராட்டம் : அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கைது!

என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்ற நிலையில், என்.எல்.சி. நுழைவு வாயில் நோக்கி புறப்பட முயன்ற பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.




கடலூர் மாவட்டம், நெய்வேலியில், என்.எல்.சி.யின் 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தியும், என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக தொண்டர்கள் வருகை தந்து கலந்து கொண்டனர்.





அப்போது என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். பின்னர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர், என்.எல்.சி.க்குள் நுழைவதற்காக புறப்பட்டனர். அப்போது என்.எல்.சி. நுழைவு வாயில் நோக்கி புறப்பட்ட பாமக வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணியை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பா.ம.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தொண்டர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி களைக்க முயற்சித்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை மீது பாமகவினர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.


காவல்துறையினரின் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். அப்போது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தாக்குதலை நடத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது. இதனால் தற்போது அப்பகுதியே போர்க்களமாக காட்சியளிக்கிறது. கலவரம் நடைபெற்ற இடத்தினை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தற்பொழுது பார்வையிட்டு வருகிறார்.

Comments