மணிப்பூர் கொடூரம் | சிபிஐ விசாரணை ஏன்? - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்


 புதுடெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்த வழக்கு விசாரணையை மாநிலத்துக்கு வெளியே மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அங்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் 6 மாத காலத்துக்குள் முடிக்க உத்தரவிடுமாறும் அரசு கோரியுள்ளது.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், இந்த விவகாரத்தில் அரசு மிகவும் தீவிரத்துடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், "தற்போது நடந்துள்ள இந்தக் குற்றங்கள் மிகவும் கொடூரமானவை என்று மத்திய அரசு கருதுகிறது. அதற்குரிய தீவிரத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற போதிலும், பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் மீது நாடுமுழுவதும் ஒரு தடுப்பு விளைவை ஏற்படுத்தும் வகையில் நீதி செய்யப்பட வேண்டும். மத்திய அரசு இந்த வழக்கை சுதந்திரமான புலன் விசாரணை அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்" என்று தெரிவித்துள்ளது.

சிபிஐ விசாரணை: மணிப்பூர் வன்முறை குறித்து மத்திய புலனாய்வு முகமை அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில அரசு ஜூலை 26-ம் தேதி பரிந்துரை செய்தது. மத்திய அரசும் இந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க ஜூலை 27-ம் தேதி பரிந்துரை செய்தது.

மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்காக பட்டியலிட்டிருந்தது. தலைமை நீதிபதி இன்று இல்லாததால் விசராணை நடக்கவில்லை. முன்னதாக, இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமாக முன்வந்து வழக்கு: மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் மைத்தேயி சமூக ஆண்கள் கும்பல் ஒன்றால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்படும் வீடியோ ஒன்று கடந்த புதன்கிழமை (ஜூலை 19) வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஒரு பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தார்.

இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த நிகழ்வால் மிகவும் தொந்தரவுக்குள்ளாகி இருப்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மணிப்பூர் வீடியோ தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியதுடன், இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

நாடாளுமன்றம் முடக்கமும் நம்பிக்கையில்லா தீர்மானமும்: மணிப்பூர் விவகாரம் குறித்த வீடியோ நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு (ஜூலை 20) ஒருநாளைக்கு முன்பாக வெளியானது. இதனைத் தொடந்து மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும், விதி 267-ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றன. ஆனால் குறுகிய கால அடிப்படையில் விவாதம் நடத்த தயார் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான இந்த அமளியால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் 6 நாட்களாக முடக்கப்பட்டன. இந்தநிலையில், இந்த விவகாரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன. அது சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments