“பெண்களை மட்டுமே மையப்படுத்தும் கதைகளில் நம்பிக்கை இல்லை” - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

 


“பெண்களை மட்டுமே மையப்படுத்தும் கதைகளில் எனக்கு நம்பிக்கையில்லை” என்று நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “பெண்களை மட்டுமே மையமாக கொண்ட கதைகளில் எனக்கு பெரிய அளவில் நம்பிக்கையில்லை. ஏனெனில் பெண்களாகிய நம் வாழ்க்கையில் ஆண்கள், பெண்கள் இருவரும் முக்கிய பங்குவகிக்கிறார்கள். சமநிலை கொண்ட ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்களை உள்ளடக்கியதே நல்ல சினிமா என நினைக்கிறேன். அப்படியில்லாவிட்டால் அதில் எந்தப் பயனுமில்லை. காரணம், சினிமா என்பது நம் வாழ்க்கையையும், சமூகத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். வெள்ளித் திரையிலும், நம் வாழ்க்கையிலும் சமநிலை அடைய வேண்டும்” என்றார்.

தொடர்ந்து அவர் சினிமாவுக்குள் நுழைந்தது குறித்து கூறுகையில், “நான் ஒரு டாக்டர். எம்பிபிஎஸ் முடித்துள்ளேன். தற்போது சினிமாவில் இருக்கிறேன். உண்மையில் இது கடவுளின் முடிவு என்றே நினைக்கிறேன். காரணம், நான் ஒருபோதும் நடிகையாவேன் என நினைத்து பார்க்கவில்லை; என்னுடைய குடும்பமும் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பமாகவே இருந்துள்ளது. அவர்களை பொறுத்தவரை படித்து முடித்து ஒரு வேலையில் இருப்பதே சமூக அந்தஸ்துடையது. சினிமா அப்படியான சமூகத்தால் மதிக்கப்படும் வேலையாக அவர்கள் கருதவில்லை” என்றார்.

Comments