புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் குஜராத் பெண்களுடன் 'தாண்டியா' நடனமாடிய தமிழிசை

 ஆளுநர் மாளிகையில் குஜராத்தின் பாரம்பரிய தாண்டியா நடனத்தை ஆளுநர் தமிழிசை ஆடினார்.

தேசிய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விதமாக புதுச்சேரியில் வாழும் குஜராத்தி மற்றும் மராத்தி சமூகத்தினர் தங்கள் கலாச்சார உடையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். வண்ணமயமாக கலை-கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மராத்தி பாரம்பரிய-கலாச்சாரப் பாடல்கள், குஜராத்தி 'தாண்டியா' மற்றும் 'கார்பா' நடனங்கள் நடைபெற்றன. நடனக் கலைஞர்களுடன் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு தாண்டியா நடனம் ஆடினார். குஜராத்தின் பாரம்பரிய தாண்டியா நடனத்தை உடன் ஆடும்படி அப்பெண்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க ஆளுநர் தமிழிசையும் நடனமாடினார்.

இதனை தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, "மதம், மொழி, கலாச்சாரம் என வேறுபட்டாலும் நாம் அனைவரும் இந்தியர்களே. அரசியலுக்காக எந்த வேற்றுமையும் ஏற்படுத்தாமல் தேச ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நமக்கு மொழிவாரியாகவும் ஒரு அடையாளம் இருக்கிறது. தேசம் வாரியாகவும் ஒரு அடையாளம் இருக்கிறது. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை. இந்த அடையாளத்தை நாமெல்லாம் மேம்படுத்தி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் சங்கமம் என்று நடத்திக் காட்டினார். இந்த சங்கமம் நாமெல்லாம் இணையானவர்கள் என்று சொல்வதற்காகத்தான்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, "குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மக்களுடன் நடனமாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இங்கு கோலாட்டம். அங்கு தாண்டியா என்கிறோம். இதுவே தேச ஒற்றுமைக்கு உதாரணம். பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிகிழமை இரண்டு மணி நேர வேலையில் ஓய்வு சலுகை என்பது பெண் அடிமைதனம் என திமுக, காங்கிரஸ் விமர்சனம் வைத்துள்ளனர். இதில் பெண் அடிமைத்தனம் இல்லை. முதலில் இதைசொன்ன அவர்கள் வீட்டில் சென்று பார்க்க வேண்டும். கோயிலுக்கு போவார்கள்- ஆனால், போகவில்லை என்பார்கள். அதே மாதிரிதான் இதுவும். பெண்கள் அடிமைத்தனம் இல்லை என்பார்கள். அவர்கள் வீட்டில் பெண்களை எப்படி வைத்துள்ளார்கள் என்பது தெரியும்'' என்றார். ரஜினியை ரோஜா விமர்சித்து வருவது குறித்து கேட்டதற்கு,"அதற்குள் போகவிரும்பவில்லை.. ரஜினிக்குள்ளும் ரோஜாவிற்குள்ளும் போக விரும்பவில்லை" என தமிழிசை பதிலளித்தார்.

Comments