பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருப்பு உடையணிந்தும், கைககளில் கருப்புக்கொடி ஏந்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தியின் தகுதி இழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு பிரதமருக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருப்பு உடை அணிந்து பங்கேற்றிருந்தனர்.


கருப்புக்கொடிகளை ஏந்தியும், பிரதமருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஸ்ரீவெல்லபிரசாத், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தொகை ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.

Comments