‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படப்பிடிப்பின்போது எனக்கு ஒரு சின்ன மன சஞ்சலம் - ரம்யா பாண்டியன்


நண்பகல் நேரத்து மயக்கம்’ படப்பிடிப்பின்போது எனக்கு ஒரு சின்ன மனச் சஞ்சலம். இயக்குநர் நம்மை ஒரு குளோஸ் அப் ஷாட் கூட எடுக்கவில்லையே; நாம் சரியாக நடிக்கவில்லையோ என்று குழம்பிக் கொண்டிருந்தேன்” என நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை ரம்யா பாண்டியன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நானும் மம்மூட்டி படங்களைப் பார்த்து வளர்ந்தவள்தான். அவருடன் இவ்வளவு விரைவில் இணைந்து நடித்தது ஒரு கொடுப்பினைதான். ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படப்பிடிப்பின்போது எனக்கு ஒரு சின்ன மனச் சஞ்சலம். இயக்குநர் நம்மை ஒரு குளோஸ் அப் ஷாட் கூட எடுக்கவில்லையே; நாம் சரியாக நடிக்கவில்லையோ என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.

ஜேம்ஸாக இருந்தவர் சுந்தரமாக மாறி எனது வீட்டின் திண்ணையில் அமர்ந்து சாப்பிடும் காட்சியை லிஜோ சார் படமாக்கிகொண்டிருந்தார். அப்போது மம்மூட்டி சாருக்கே ஒரு எண்ணம் வந்து, “ரம்யாவுக்கு இந்தக் காட்சியில் நீங்கள் ‘குளோஸ் அப்’ எதுவும் எடுக்கவில்லையே” என்று இயக்குநரைப் பார்த்துக் கேட்டார். அப்பா! எவ்வளவு அனுபவம் என்று மம்மூட்டி சாரைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.

அப்போது லிஜோ மிகக் கூலாகப் பதில் சொன்னார்: “சேட்டோ... புரட்டகானிஸ்ட் நிங்களுக்கே ரண்டு குளோஸ் ஷாட்தான். அது நிங்கள் சுந்தரமாய் இருந்து திருச்சு ஜேம்ஸாய் மாறும் ஸீன்” என்றார் லிஜோ. ஆன் தி ஸ்பாட்டில் மம்மூட்டி சாரின் நடிப்பைப் பார்த்தது எனக்கு மிகப்பெரிய ‘லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ்’.

குறிப்பாக, ஊர்க்காரர்களிடம், “நான் இந்த ஊர்க்காரன் இல்லையா..?” ன்று ஒவ்வொருவரிடமும் கேட்கும் சீன் ஆகட்டும், சாப்பிட்டுக்கொண்டே மகளைப் பற்றிப் பேசும் சீன் ஆகட்டும்... இரண்டிலுமே அங்கே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். சாப்பிடும் சீனில் மம்மூட்டிக்கு பெண்ணாக நடித்தவர், இயக்குநர் சொல்லும் முன்னதாகவே அழ ஆரம்பித்துவிட்டார். அந்தக் காட்சி முடிந்தும் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தார். லிஜோ சாரும் மம்மூட்டி சாரும் அவரை ஆறுதல்படுத்தினார்கள்” என்றார்.

அந்தப் பெண்ணிடம், “ஏன் இயக்குநர் சொல்லும் முன்பே அழுதுவிட்டாய்?” என்று கேட்டபோது, “எனக்கு என் அப்பா ஞாபகம் வந்துவிட்டது” என்று சொன்னார். அதுதான் மம்மூட்டி சாருடைய நடிப்பின் ‘இம்பேக்ட்’ என்று நினைக்கிறேன். கதாபாத்திரத்தின் உணர்வுடன் எப்படிக் கலப்பது என்பதைப் பற்றி மம்மூட்டி சார் நிறைய எனக்குச் சொன்னார். ஒரு நடிப்புப் பேராசிரியரிடம் கற்றுகொண்டதுபோல் பெருமையாக உணர்ந்தேன். சிறந்த கலைஞர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதையும் உணர்ந்துகொண்டேன்.

Comments