“அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கும் வரை போராடுவோம்” - கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ பேச்சு

 


புதுக்கோட்டை: “மாநில சமூக நலத் துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டாலும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கும் வரை போராடுவோம்” என்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை கூறியுள்ளார்.


அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அங்கன்வாடி மையங்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நேற்று (ஏப்.25) முதல் அந்தந்த ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் எம்.விஜயலட்சுமி தலைமையில் 2-ம் நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது. மழை மற்றும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'காலிப் பணியிடங்களை நிரப்பவும், கோடை விடுமுறை விடுவது குறித்தும் தமிழக முதல்வருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என மாநில சமூக நலத் துறை அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து, புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.




போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கி கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ எம்.சின்னதுரை பேசியது: “அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் ஐந்து முறை பேசி இருக்கிறேன். பேரவையின் முதல் பேச்சிலும் பதிவு செய்து இருக்கிறேன். சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்தும் பலமுறை கோரிக்கை அளித்துள்ளேன். கடந்த வாரம்கூட அமைச்சரை நேரில் சந்தித்து பேசினேன். எனினும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.


தற்போது, காலிப்பணியிடங்களை நிரப்பவும், மே மாதம் கோடை விடுமுறை விடப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதை, அரசாணையாக வெளியிட வேண்டும். மேலும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கும் வரை ஓயமாட்டோம். ஊழியர்கள் வெளியே போராடுவார்கள். நாங்கள் (எம்எல்ஏ) சட்டப்பேரவையில் போராடுவோம். கோரிக்கையை வென்றெடுக்காமல் ஓய மாட்டோம்” என்றார்.


சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.தேவமணி, மாவட்டச் செயலாளர் ஏ.சி.செல்வி, சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Comments