நாட்டின் ஒற்றுமைக்கு சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் வலு சேர்க்கிறது: பிரதமர் மோடி

 



புதுடெல்லி: குஜராத்தில் நடைபெற்ற சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம், நாட்டின் ஒற்றுமைக்கு வலு சேர்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள சவுராஷ்டிரா மொழி பேசும் மக்களை, அவர்களின் பூர்விக இடமான குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதிக்கு அழைத்துச் செல்லும் சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த 17-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது, ''சர்தார் வல்லபாய் படேலுக்கும் மகாகவி சுப்ரமணிய பாரதிக்கும் இருந்த தேசிய உணர்வு, இந்த சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் உயர்பெற்றிருக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள், நமது நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகின்றன. எனவே, இந்த நிகழ்ச்சியின் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் ஆசி நம் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது.


ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை பார்க்கத் துடித்த நமது முன்னோர்களான சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கனவை இந்த நிகழ்ச்சி நனவாக்கி இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டிருக்கும் புதிய கலாச்சார பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டுக்களாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் திகழ்கின்றன.


நாட்டிற்கு தற்போது தேவை நல்லிணக்கம்தான். நமக்குள் ஒத்துழைப்பு இருக்க வேண்டுமே அன்றி, கலாச்சார மோதல்கள் அல்ல. நமக்குத் தேவை சங்கமங்கள்தான்; போராட்டங்கள் அல்ல. வேறுபாடுகளை கண்டறிவது நமக்குத் தேவையில்லை. உணர்வுபூர்வமான ஒற்றுமைதான் நமக்குத் தேவை. இந்தியாவின் தனித்துவமான பாரம்பரியமே, அனைவரையும் இணைத்துக்கொள்வது; ஏற்றுக்கொள்வது; அனைவோடும் இணைந்து முன்னேறிச் செல்வதுதான்.


பல நூற்றாண்டுகளாக இங்கே சங்கமங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கும்பமேளா என்பதே நமது சங்கமம்தான். பல்வேறு சிந்தனைகள், கலாச்சாரங்களின் சங்கமம் அது. நாட்டில் நிகழ்ந்த இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுமே நமது ஒற்றுமைக்கு முக்கிய பங்காற்றி இருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்து தற்போது 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம் போன்ற புதிய பாரம்பரியத்தை நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தச் சங்கமம் நர்மதை மற்றும் வைகையின் சங்கமம். இது தாண்டியா நடனம் மற்றும் கோலாட்டத்தின் சங்கமம்'' என்று பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார்.

Comments