ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: சம்பவ இடத்தில் என்ஐஏ தீவிர சோதனை

 


ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியான பிம்பர் காலி என்ற இடத்தில் இருந்து சங்கியோடி என்ற இடத்துக்கு ராணுவ வாகனத்தில் ராஷ்ட்ரீய ரைஃபில் படைப் பிரிவின் வீரர்கள் 6 பேர் நேற்று சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் அவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் தீ பிடித்து எரிந்தது.

தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ட்ரோன்களைக் கொண்டும், மோப்ப நாய்களைக் கொண்டும் தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், ராக்கெட் மூலம் வீசக்கூடிய எறிகுண்டுகள் மூலம், வாகனத்தின் பெட்ரோல் டேங்கை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு அதன் காரணமாக வாகனம் தீ பிடித்து எரிந்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. அதோடு, துப்பாக்கிகளைக் கொண்டு 3 பக்கங்களில் இருந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. 12-க்கும் மேற்பட்ட குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள குண்டுகளில் சீன குறியீடு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த குண்டுகள் குண்டு துளைக்காத ஆடையில் உள்ள எஃகுத் தகட்டை துளைக்கக் கூடியவை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடம் பாதுகாப்புப் படையினரால் சீலிடப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்புப் படையினர் இன்று அங்கு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, அதன் ஒரு மாநாட்டை ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அடுத்த மாதம் நடத்த உள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீநகரில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் அரசு சீனாவை கேட்டுக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீநகரில் ஜி20 மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

Comments