மதுரை மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகள் 2024-ல் துவங்கி 2027-ல் முடிக்கப்படும்: மேலாண்மை இயக்குநர் சித்திக் தகவல்

 


மதுரை மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகள் 2024-ல் துவங்கி, 2027-ல் முடிக்கப்படும் என்று திட்ட மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை வரையிலும் சுமார் 31 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 8,500 கோடி நிதி ஒதுக்கப்படும் என, தமிழக நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்நிலையில், மதுரையில் இத்திட்டம் குறித்து அனைத்து அதிகாரிகளுடன் மெட்ரோ ரயில் திட்ட மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் ஆலோசனை நடத்தினார்.

அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ''மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் எடுப்பதில் பல்வேறு சிரமம் உள்ளது. இதற்கு மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் ஒத்துழைக்க வேண்டும். இத்திட்டம் 10 அல்லது 20 ஆண்டோ உபயோகப்படுவது இல்லை. வாழ்நாள் முழுவதும் அடுத்த தலை முறைக்குமான திட்டம். விரைந்து செயல்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

சர்வே, குடிநீர் குழாய், நெடுஞ்சாலை, பூமிக்கு அடியில் செல்லும் மின்சார கேபிள்கள் உள்ளிட்ட பணிகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கவேண்டும். மாவட்டம், மாநகராட்சி, காவல்துறை நிர்வாகங்கள் இணைந்து வழித்தடம் பகுதி குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அறநிலையத்துறை, மதுரை மாநகராட்சி நிலங்களை எடுக்க, நடவடிக்கை எடுக்கவேண்டும். தோப்பூர் பகுதியில் மெட்ரோ ரயில்களை நிறுத்த டிப்போ அமைக்க முடியுமா என ஆய்வு செய்ய வேண்டும். பெரியார் பேருந்து நிலையம், மதுரை ரயில் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய மூன்று சந்திப்புகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் ஒரு ரயில் நிறுத்தம் அமைக்க வாய்ப்புள்ளது.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை விரைவுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்க நிலம் சர்வே பணிகளை ஏப்ரல் 21ல் தொடங்குகிறது. வசந்தநகர் - கோரிப்பாளையம் வரை இடையே பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டரும், மேல் பகுதியில் 26 கிலோ மீட்டரும் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படும். பூங்கா, மரங்களுக்கு பாதுகாக்கப்படும். மெட்ரோத் திட்டத்தில் மதுரை விமான நிலையமும் இணைக்கப்படும். தற்போது, அது நடக்காது. மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறைக்கு வந்தபின், அடுத்த 3 ஆண்டில் மதுரை விமான நிலையத்தை இணைப்பது போன்ற விரிவாக்கம் செய்யப்படும். சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்'' என்றார்.

தமிழ்நாடு அரசு முன்னுரிமை: மேலும், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''தமிழ்நாடு அரசு மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது. இத்திட்டத்திற்காக ஏற்கெனவே ஆரராய்ந்த சாத்தியக்கூறுபடி, திருமங்கலம்- ஒத்தக்கடைக்கு முதல் கட்டமாக 31 கி. மீட்டருக்கான வழித்தடம் அமைக்கப்படும். 5 கி., மீ., பூமிக்கு அடியிலும், எஞ்சிய 26 கி. மீ., பூமிக்கு மேலும், அமைக்கிறது. பூமிக்கடியில் 4 ரயில் நிலையம் உட்பட 14 நிலையங்கள் அமைகிறது. விரிவான திட்ட அறிக்கை ஜூன் மாத்திற்குள், அதாவது 75 நாளில் முடித்து, மத்திய அரசில் ஒப்புதல் பெறப்படும்.

இதன்பின், நிதியை பெற்று, 2024 இறுதிக்குள் கன்ஸ்ட்ரக்சன் தொடங்கும். 2027ல் திட்டம் நிறைவு பெறும். மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து தலா 20 சதவீதமும், நிதிநிறுவனங்கள் மூலம் 60 சதவீதமும் நிதி பெற்று பணி தொடங்கப்படும். பழமையான நகரம் என்பதால் மீனாட்சி கோயிலை சுற்றிலும் ரயில் நிலையம் அமைப்பில் தாமதம் ஏற்படலாம். மதுரைக்கான மெட்ரோ ரயில் சுமார் 900 பேர் வரை பயணிக்கும் 3 பெட்டிகளை கொண்டு இயக்கப்படும். சுமார் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் விகிதத்தில் ஓட்ட திட்டமிடுகிறோம். வைகை ஆற்றைகடக்கும் போது, ஆற்றின் தரைமட்டத்தில் இருந்து சுமார் 20மீட்டர் ஆழத்தில் வழித்தடம் அமைக்கப்படும்'' என்றார்.

Comments