“கோவிட் சமயத்தில் 180 நாடுகளுக்கு மருந்துகள், தடுப்பூசி வழங்கி இந்தியா உதவியது” - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்


 புதுடெல்லி: கோவிட் பெருந்தொற்று சமயத்தில் 180-க்கும் அதிகமான நாடுகளுக்கு தடுப்புமருந்துகள், தடுப்பூசி வழங்கி இந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும் 'வசுதேவ குடும்பம்' இந்தியாவின் பாரம்பரியம் என்றும் கூறியுள்ளார்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற நடைபயணத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் கலந்து கொண்டனர். டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் இருந்து நிர்மான் பவன் வரை நடந்த இந்த நடைபயணத்தில், மருத்துவ மற்றும் உதவி மருத்துவ ஊழியர்கள் பங்கேற்று நடந்தனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர், "இந்த உலக சுகாதார தினத்தில், உலகம் முழுவதும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென நான் வாழ்த்துகிறேன். 'வசுதேவ குடும்பம்' என்பது நமது பாரம்பரியத்தில் ஒன்று, இந்த திட்டத்தின் மூலம், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலக சுகாதாரத் துறைக்கு இந்தியா தனது பொறுப்பை பூர்த்தி செய்து வருகிறது. கோவிட் பரவலின்போது உலகம் முழுவதும் மருத்துத் தட்டுப்பாடு இருப்பதை நாம் உணர்ந்தோம். அதனைத் தொடர்ந்து 180க்கும் அதிமான நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசி கிடைப்பதற்கு இந்தியா வழிவகை செய்துள்ளது" என்று தெரிவித்தார்.

இதனிடையில் நாட்டில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில, யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று பாதிப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துவரும் தினசரி கோவிட் தொற்று பாதிப்பு 6,000 கடந்தது. இந்தியாவில் வியாழக்கிழமை ஒரே நாளில் புதிதாக 6,050 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28,303 -ஆக அதிகரித்துள்ளது. கோவிட் பாதிப்பினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய பாதிப்பு புதன்கிழமை ஏற்பட்ட 5,335 பாதிப்பைவிட 13 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments