தமிழகத்தில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா தாக்கல்: புதுச்சேரி அரசியல் கட்சிகளுக்கு அதிமுக கண்டனம்

 


தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதா தாக்கல் செய்திருப்பது குறித்து புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகள் கண்டிக்காததற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிறுப்பதாவது: 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்பது உலகத் தொழிலாளர்களின் போராட்டத்துக்குப் பிறகு தொழிலாளர்களுக்கு கிடைத்த உரிமையாகும். போராடி பெற்ற உழைப்பாளர்களின் உரிமையை தமிழகத்தில் ஆட்சி நடத்தும் தொழிலாளர் விரோத அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கார்ப்பரேட் கம்பெனிகளின் எண்ணத்தை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

இதை ஆரம்ப நிலையிலேயே எங்களது அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக எதிர்த்துள்ளார். தமிழக திமுக அரசால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் என்பது 8 மணி நேரம் வேலை என்ற தொழிலாளர்களின் உரிமையை வேரோடு பிடுங்கி எரியும் செயலாகும். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்த திமுக தொடர்ந்து தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது. திமுக அரசின் தொழிலாளர் விரோத அத்தனை செயல்களுக்கும் மகுடம் சூட்டுகின்ற விதத்தில் இந்த சட்ட மசோதாவை திமுக கொண்டு வந்துள்ளதை தொழிலாளர் நலனுக்காக பாடுபடும் அத்தனை அரசியல் கட்சிகளும் உறுதியாக எதிர்க்க வேண்டும்.

இந்திய நாட்டில் முதன் முதலாக 1923-ஆம் ஆண்டு தொழிலாளர்களுடைய உரிமைக்காக பாடுபட்ட சிந்தனை சிற்பி சிங்காரவேலர் முதன் முதலாக மே 1-ம் தேதியை தொழிலாளர் தின நாளாக கொண்டாடினார். அவரால் கொண்டாடப்பட்ட இந்த வருடம் மே 1- தேதி நூற்றாண்டு நாளாகும்.

இந்த நூற்றாண்டு நாளில் தொழிலாளர் வர்க்கத்துக்கு அவர்களின் உரிமையை நசுக்கும் பரிசை தமிழகத்தை ஆளும் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். வரும் மே 1-ம் தேதி 8 மணி நேர பணிக்காக போராடி பெற்ற உழைப்பாளர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ள இந்த நிலையில் 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதாவை தமிழக திமுக அரசு கொண்டு வந்திருப்பது ஆணவத்தின் உச்சகட்டமாகும்.

தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யும் எந்த அரசாக இருந்தாலும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. 8 மணிநேர வேலை என்பது ஒரு மாபெரும் சரித்திர போராட்டத்தில் தொழிலாளருக்கு கிடைத்த வெற்றி ஆகும். அந்த வெற்றியை காலில் போட்டு மிதிக்கும் செயலில் தமிழக திமுக அரசு ஈடுபட்டுள்ளது. இதனை புதுச்சேரி அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். தொழிலாளர்கள் நலனுக்காக குரல் கொடுப்பதாக பேசிக் கொண்டிருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த எந்த அரசியல் கட்சியும் இந்த நிகழ்வை கண்டிக்காதது கண்டனத்துக்குரியதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments