தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் விஷம் குடித்து உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

 


உடன்குடியில் விஷம் குடித்த தூய்மைப் பணியாளர் மரணம் அடைந்தது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுக்காலனி பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் சுடலைமாடன் (வயது 56). இவர் உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தங்கம்மாள். சுடலைமாடனை முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி, தற்போதைய செயல் அலுவலர் பாபு ஆகியோர் சாதியை சொல்லி அவதூறாக பேசியதாகவும், பணி நிரந்தரம் செய்ய பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுடலைமாடன் கடந்த 17 ஆம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுடலைமாடன் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

இந்த நிகழ்வு குறித்து இன்று (மார்ச் 24) தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அந்தப் பதிலில், "இந்தச் சம்பவம் குறித்து ஆயிஷா கல்லாசி, பாபு ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், தற்கொலைக்கு தூண்டுதல், அரசு வேலையை தடுத்தல் போன்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுடலைமாடன் மகளுக்கு உடனடியாக பணி வழங்கப்பட்டது. உடனடியாக ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. மீதம் உள்ள தொகை விரைவில் வழங்கப்படும். இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

Comments