சமூக பதற்றத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி: தமிழக டிஜிபியிடம் திருமாவளவன் புகார் மனு

 


சமூக பதற்றத்தை உருவாக்கி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்வதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேற்று சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்திருமாவளவன் புகார் மனுஅளித்தார். பின்னர், செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்த சிலதகவல்களை டிஜிபியிடம் பகிர்ந்துகொண்டேன். குறிப்பாக பாஜகவினர் திட்டமிட்டு வன்முறைகளைத் தூண்டும் வகையில் பொது வெளியில், பொது மேடைகளில், சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர், பரப்பி வருகின்றனர்.

அண்மையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது சமூக பதற்றத்தை உருவாக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் உள்ளது.

ஒரு ராணுவ பணியாளர், ராணுவத்தில் வேலை செய்யக் கூடியவர் `குண்டு வீசுவோம், துப்பாக்கியால் சுடுவோம்' என்றெல்லாம் பேசும் அளவுக்கு அதைத் தமிழ்நாடுபாஜக தலைவர் வெளிப்படையாகவே ஊக்கப்படுத்துகிறார்.

இது சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் என்கிற சதித்திட்டம் என்று தெரிய வருகிறது. திமுக அரசுக்கு நெருக்கடி தர வேண்டும், சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும், அதன் மூலம் அரசியல் ஆதா யம் தேட வேண்டும் என்பதில் பாஜக குறிவைத்து வேலை செய்கிறது.

வட மாநிலங்களில் இப்படித்தான் அவர்கள் வெறுப்பு பேச்சு மூலம் வெறுப்பு பரப்புரை மூலம்வன்முறைகளைத் தூண்டி ஆதாயம் தேடி வருகின்றனர். வட மாநிலங்களில் பின்பற்றக் கூடிய அதே யுக்திகளைத் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த பாஜகவினர் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

இப்படி நாடெங்கிலும் பதட்டத்தை உருவாக்கும் வகையில்பாஜகவினர் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை டிஜிபி பார்வைக்குக் கொண்டு சென்றோம். பாஜகவினரின் சதிமுயற்சியைச் சுட்டிக்காட்டி அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.

வேங்கை வயல் பிரச்சினையிலும் உடனடியாக உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை சிறைப்படுத்தவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளோம்.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒவ்வொரு நாளும் குதர்க்கமான கருத்துகளைப் பேசி வருகிறார். ஆளுநர் உட்பட அவர்களின் அடிமட்ட தொண்டர்கள் வரையில் தமிழ்நாட்டைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறார்கள். அரசும் காவல் துறையும் கவனமாக இருக்க வேண்டும்.

வட மாநிலங்களைப் போல தமிழகத்தையும் வன்முறைக் காடாக்குவதற்கு பாஜகவினர் முனைவதாகத் தெரிகிறது என டிஜிபியிடம் தெரிவித் துள்ளோம் என்றார்.

Comments