இறுதிகட்டத்தில் பணிகள்: ஸ்மார்ட் சிட்டி ஆக மாறியதா சென்னை? - விரிவான பார்வை

 


சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜூன் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நகரத்திற்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி நிதி வழங்கப்படும். இதைப்போன்று மாநில அரசு ரூ.500 கோடி நிதி வழங்க வேண்டும். இவை இரண்டும் சேர்த்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தின்படி நகரின் ஒரு பகுதியை தேர்வு செய்து, அந்தப் பகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் பகுதியாக மாற்றுதல், நகரில் பொதுமக்கள் தொடர்புடைய பல்வேறு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதைத் தவிர்த்து நடைபாதைகள் அமைத்தல், இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

இதன்படி, தமிழகத்தில் மொத்தம் 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னை மாநகராட்சி முதன்முதலாக இந்தத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நகரம் ஆகும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் 2015-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி தொடங்கப்பட்டு, தற்போது 8-வது ஆண்டு நடைபெற்று வருகிறது.

இந்த 8 ஆண்டுகளில் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மொத்தம் ரூ.990 கோடி நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்த பிப்ரவரி மாதம் வரை ரூ.862 கோடி நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு 48 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 43 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 5 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த 43 திட்டங்களில் ஒரு சில திட்டங்கள் மக்களுக்கு தேவையான திட்டங்களாகவும், ஒரு சில திட்டங்கள் தோல்வியடைந்த திட்டங்களாகவும் பார்க்கப்படுகிறது.

மாற்றுத்திறனாகளுக்கான பூங்கா, குழந்தைகளுக்கான போக்குவரத்துப் பூங்கா, தெருவிளக்குளை எல்இடி விளக்குகளாக மாற்றுவது, சோலார் மூலம் மின் உற்பத்தி உள்ளிட்ட திட்டங்கள் நல்ல திட்டங்களாக பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்மார்ட் வகுப்பறைகள், குடிநீர் வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம், நம்ம சென்னை செயலி உள்ளிட்ட திட்டங்களும் நகரை மேம்படுத்த தேவையான திட்டங்களாக பார்க்கப்படுகிறது.

ஆனால், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் சைக்கிள் ஷேரிங் திட்டம் மற்றும் சாலையோர வாகன நிறுத்த திட்டங்கள் தோல்வியடைந்த திட்டங்களாக பார்க்கப்படுகிறது. சாலையோர வாகன நிறுத்த திட்டம் மூலம் 3 ஆண்டுகளாக எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. தற்போது இதை மீண்டும் முழு வேகத்துடன் அமல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சைக்கிள் ஷேரிங் திட்டம் பொதுமக்கள் இடையில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. பல இடங்களில் சைக்கிள் சேதமடைந்து உள்ளன. இதைப்போன்று தி.நகரில் அமைக்கப்பட்ட பல் அடுக்க வாகன நிறுத்தத்தை பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்துவது இல்லை. பாலங்களின் சுவர்களில் அமைக்கப்பட்ட செங்குத்து பூங்காக்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளன.

இதைத் தவிர்த்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மழைநீர் வடிகால் திட்டத்திற்கு ரூ.200-க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியின் கீழ் மழைநீர் வடிகால் கட்ட ரூ.150 கோடி நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 64 நீர் நிலைகள் மற்றும் 15 கோவில் குளங்களை தூர்வாரும் பணிகளும் நடைபெற்றுள்ளது. வில்லிவாக்கம் ஏரி புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

நகரின் ஒரு பகுதியை தேர்வு செய்து அந்தப் பகுதியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், பாண்டிபஜார் நடைபாதை வளாகம், 23 சாலைகளில் நடைபாதைகள், ஜி.என்.செட்டி மற்றும் வெங்கடநாராயணா சாலை, வடக்கு மற்றும் தெற்கு உஸ்மான் சாலைகள், பர்கிட் சாலை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் தொடர்பாக இரு வகையான கருத்துகளை பொதுமக்கள் கூறுகின்றனர். ஒரு தரப்பினர், இது நல்ல திட்டம் என்றும், இன்னொரு தரப்பினர் இந்தத் திட்டத்தால் சாலைகள் சிறியதாக மாறிவிட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "விதிகளின் படி ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை வரும் மார்ச் மாதத்துடன் முடிக்க மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மீதம் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவு பெற ஜூன் மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவு பெற்றாலும், குறைவான பணியாளர்களை கொண்டு ஸ்மார்ட் சிட்டி இயங்கும். தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் நிதிகளை கொண்டு ஸ்மார்ட் சிட்டி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றனர்.

Comments