“இந்து என்பது வாழ்க்கை முறை” - ‘பெயர் மாற்றும் ஆணையம்’ அமைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்




 படையெடுப்பாளர்களால் வைக்கப்பட்ட பெயர்களை மாற்ற ஆணையம் அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ''இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் பிரதான சாலைகளின் பெயர்கள் அந்நியர்களின் ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளன. மீண்டும் பழைய பெயர்களை வைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ‘பெயர் மாற்றும் ஆணையம்’ அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்'' என அவர் கோரி இருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், நாகரத்னா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது தரப்பு வாதத்தை முன்வைத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய, ''15-ம் நூற்றாண்டில் படையெடுத்த காட்டுமிராண்டித்தனமான கொடூரமான படையெடுப்பாளர்களால் நமது நாட்டில் மத தலங்களின் பெயர்களும், சாலைகளின் பெயர்களும் திட்டமிட்ட ரீதியில் மாற்றப்பட்டன. இது குடிமக்களின் உரிமையையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதித்துள்ளது. இந்துக்களின் கலாச்சாரத்தையும், மதத்தையும், கண்ணியத்தையும் நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும்.

இந்தரபிரஸ்த நகரை உருவாக்கியவர் யுதிஷ்ட்ரர். ஆனால், மகாபாரதத்தில் வரும் குந்தி, பீமன், நகுலன், சகாதேவன் என ஒருவரது பெயரும் இந்தரபிரஸ்தத்தில் (இன்றைய டெல்லியில்) இல்லை. மாறாக, அக்பர், கோரி, கஜினி, துக்ளக் போன்ற பெயர்கள்தான் உள்ளன. எனவே, உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பெயர் மாற்றும் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணையம், பழைய இந்து பெயர்களை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் அதற்கான உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்'' என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகரத்னா, ''இந்து என்பது உண்மையில் ஒரு மதம் அல்ல. அது வாழ்க்கை முறையை குறிக்கிறது. அதில் மதவெறிக்கு இடமில்லை. நீங்கள் இந்து மதத்தை சிறுமைப்படுத்தாதீர்கள். இந்தியா அனைவரையும் உள்ளடக்கியது. அவர்கள் படையெடுத்து வந்தவர்களாக இருக்கலாம்; அல்லது நண்பர்களாக இருக்கலாம். பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தார்கள். அது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தியது. இதுபோன்ற மனுக்கள் மூலம் மீண்டும் ஒரு பிளவை நாம் ஏற்படுத்திவிடக்கூடாது.

படையெடுத்தவர்களால், அந்நியர்களால் நாம் ஆளப்பட்டுள்ளோம். அது ஒரு உண்மை. வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீங்கள் விரும்ப முடியாது. நாட்டில் இன்று வேறு பிரச்சினைகளே இல்லையா? கடந்த காலங்களில் நடந்தவற்றை விட்டுவிட்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். பெயர் மாற்றும் ஆணையத்தை உள்துறை அமைச்சகம் அமைக்க வேண்டும் என நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். அது உள்துறை அமைச்சகத்துக்கு எத்தகைய அழுத்தத்தை கொடுக்கும் என தெரியுமா?'' என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பேசிய நீதிபதி ஜோசப், ''குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களை குற்றம் சாட்டுவதன் மூலம் நீங்கள் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். கடந்த காலத்தைப் பற்றி மட்டுமே நீங்கள் கவலைப்படுகிறீர்கள். பழங்காலத்தை தோண்டி எடுத்து அதை தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததிகளுக்கு கொடுக்க முயல்கிறீர்கள். பழங்காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களைக் கொண்டு நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முடியாது.

இந்தியா மதச்சார்பற்ற நாடு. இந்த நீதிமன்றம் மதச்சார்பற்ற அமைப்பு. உள்துறை அமைச்சகம் மதச்சார்பற்ற துறை. இவை அனைத்து சமூகத்தின் நலனுக்காக இருக்கின்றன. ஒரு சமூகத்திற்காக மட்டும் இவை இல்லை'' என தெரிவித்தார்.

இதையடுத்து, தனது மனுவை திரும்பப் பெறுவதாக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய தெரிவித்தார். மனுவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என கூறிய நீதிபதி ஜோசப், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Comments