3 பெட்டிகள், நீளம் குறைந்த நடைமேடை: மதுரைக்கு வருவது எந்த மாதிரியான மெட்ரோ ரயில்?



மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. முன்னதாக, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை சுரங்கப்பாதை வழியாக செயல்படுத்தினால் ரூ.8,000 கோடியும், உயர்மட்ட பாலம் வழியாக செயல்படுத்தினால் ரூ.6,000 கோடியும் செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது.

மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகம் முதல் நிலை, 2-வது நிலை மற்றும் 3-வது நிலை நகரங்களில் பல்வேறு வகையான போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்தும் வகையில் விதிகளை வகுத்துள்ளது. இதன்படி முதல் நிலை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டமும், 2-வது மற்றும் 3வது நிலை நகரங்களுக்கு லைட் மெட்ரோ மற்றும் நியோ மெட்ரோ திட்டங்களும் செயல்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மதுரைக்கு ஏற்ற போக்குவரத்து திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரயில்: மெட்ரோ ரயில் என்பது சென்னை போன்ற பெருநகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு பெருந்திரள் போக்குவரத்து திட்டம் ஆகும். இந்த மெட்ரா ரயில் திட்டங்களை உயர் மட்ட பாதை அமைக்க ஒரு கி.மீ ரூ.200 முதல் ரூ.250 கோடியும், சுரங்கப்பாதை அமைக்க ரூ.500 முதல் ரூ.550 கோடியும் ஆகும். இந்த திட்டத்திற்கு அதிக செலவு ஆகும் என்பதால் பெரு நகரங்களில் மட்டும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

லைட் மெட்ரோ: இந்த வகையான திட்டம் 2-ம் கட்ட நகரங்களில் செயல்படுத்தப்படும். லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஒரு கி.மீட்டருக்கு ரூ.120 முதல் ரூ.140 கோடி தான் ஆகும். இதனை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். காலை அல்லது மாலை வேளையில் 15 ஆயிரம் பேர் பயணிக்கும் ஒரு வழித்திடத்தில் இந்த வகையான மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

நியோ மெட்ரோ: இந்த வகையான திட்டம் 2-ம் கட்ட நகரங்களில் செயல்படுத்தப்படும். நியோ மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஒரு கி.மீட்டருக்கு ரூ.70 முதல் ரூ.80 கோடி தான் ஆகும். இதனை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். காலை அல்லது மாலை வேளையில் 8 ஆயிரம் பேர் பயணிக்கும் ஒரு வழித்திடத்தில் இந்த வகையான மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

மத்திய அரசு வழிகாட்டுதல் படி இவற்றில் ஏதாவது ஒரு மெட்ரோ ரயில் திட்டம் மதுரையில் செயல்படுத்தப்படும். இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மெட்ரோவில் 4 பெட்டிகள் இருக்கும். ஆனால் மதுரை மெட்ரோ ரயில் 3 பெட்டிகள் இருக்கும் வகையில் அமைக்கப்படும். நடைமேடைகள் சிறியதாக இருக்கும். சென்னையில் 120 மீ உள்ள நடைமேடை 80 மீட்டராக குறைய வாய்ப்பு உள்ளது" என்று அவர்கள் கூறினர்.


 

Comments