இதுதான் டெஸ்ட் மேட்ச்: ஃபாலோ ஆன் வாங்கியும் நியூஸிலாந்து 1 ரன்னில் அபார வெற்றி- தொடர் சமன்


டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் வெற்றி பெறுவது 2வது முறையாக இன்று வெலிங்டனில் நடந்தது. ஆம்! 258 ரன்கள் இலக்கை எதிர்த்து இங்கிலாந்து 48/1 என்று தொடங்கி 257 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பரபரப்பான இந்த டெஸ்ட் வெற்றி மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து சமன் செய்தது. வாக்னர் வீசிய லெக் சைடு ஷார்ட் பிட்ச் பந்தை ஆடப்போய் ஜேம்ஸ் ஆண்டர்சன் லேசாகத் தொட பிளண்டெல் உச்ச கட்ட பிரஷரில் அருமையான கேட்சைப் பிடிக்க இங்கிலாந்துக்கு வரலாற்று வெற்றியை மறுத்தது நியூஸிலாந்து.

ஆம்! இந்த டெஸ்ட்டிலும் இங்கிலாந்து வென்றிருந்தால், நாம் நேற்று குறிப்பிட்டது போல் வெளிநாட்டு மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து வென்ற வரலாற்றை 108 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து செய்திருக்கும். அது தடுக்கப்பட்டது. இங்கிலாந்தின் பாஸ் பால் அணுகுமுறை பிசுபிசுத்துப் போனது, ஆனால் இந்தத் தோல்வியை பற்றி இங்கிலாந்து கவலைப்படாது. நாம் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருதலைப்பட்சமான பிட்ச், டெஸ்ட் போட்டிகளை பார்த்து வரும் நிலையில் உண்மையான கிரிக்கெட்டின் வெற்றியாக இந்த நியூஸிலாந்தின் வெற்றியைப் பார்க்க வேண்டியுள்ளது.

இங்கிலாந்து வரலாறு படைக்கும் என்று பார்த்தால் நியூஸிலாந்து வரலாறு படைத்து விட்டது. அதாவது பாலோ ஆன் வாங்கிய பிறகு வென்ற 4வது அணியாகும் நியூஸிலாந்து. 1 ரன்னில் வெல்லும் 2வது அணியாகும் நியூஸிலாந்து. இன்றைய நியூசிலாந்தின் வெற்றிக்குக் குறுக்காகவும் இங்கிலாந்து வெற்றியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் நின்றது ஜோ ரூட் தான். ஜோ ரூட் அதிரடி முறையில் ஆடி 113 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 95 ரன்கள் எடுத்து வாக்னரின் வழக்காமன ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்று வானில் கொடியேற்ற மிட்விக்கெட்டில் பிரேஸ்வெல் கேட்சை ஏற்றுக்கொண்டார்.

ஆட்டம் 48/1 என்று தொடங்கிய நிலையில் நியூஸிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. ஆலி ராபின்சன், அபாய வீரர் பென் டக்கெட், ஆலி போப், நவீன காட்டடி சூப்பர் ஸ்டார் ஹாரி புரூக் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற இங்கிலாந்து 80/5 என்று ஆனது. புரூக் ரன் அவுட் ஆனதற்கு ஜோ ரூட்தான் காரணம், முக்கியமானது என்னவெனில் புரூக் பந்தையே எதிர்கொள்ளாமல் டக்கில் ரன் அவுட் ஆனதுதான், கல்லியில் தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க முயன்றார்கள், ஆனால் 3வது ஸ்லிப்பிலிருந்து பிரேஸ்வெல் விரைவில் வந்து த்ரோவை அடிக்க பிளண்டெல் ஸ்டம்பை தட்டும்போது புரூக் ‘ஃப்ரேமில்’ கூட இல்லை. மிகப்பெரிய அடி.

ஆனால் இதனால்தானோ என்னவோ ரூட் ஆக்ரோஷமாக ஆடினார், இவரும் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் 101 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஆனால் முதலில் ஸ்டோக்ஸ் வெளியேறினார். அவர் 116 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து பொறுப்புடன் ஆடி வந்த நிலையில் வாக்னரின் பவுன்சரை அடிக்க முற்பட்டு வலது கை கிரிப்பை இழந்ததால் ஸ்கொயர்லெக்கில் லாதமிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இதன் பிறகு நியூஸிலாந்து வெற்றிக்குக் குறுக்காக நின்றது பென் ஃபோக்ஸ்தான், இவர் 35 ரன்களை எடுத்து 9வது விக்கெட்டாக சவுதியின் பவுன்சரில் வெளியேறினார்.

ஆனால் ஜாக் லீச் 31 பந்துகளை விரயம் செய்து 1 ரன் எடுத்து நாட் அவுட்டாக இருந்தது என்ன மாதிரியான இன்னிங்ஸ் என்று புரிந்து கொள்ள மெக்கல்லமே திணறுவார். ஆண்டர்சன் கூட ஒரு பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்தார், கடைசியில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆகி இங்கிலாந்து தோற்றது, ஆனால் ஜாக் லீச் இன்னிங்சை எத்தனை பெரிய பண்டிதர்களாலும் புதிரை அவிழ்க்க முடியாது. 31 பந்தில் 1 ரன். நிச்சயம் மெக்கல்லம் உள்ளே டோஸ் விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

நியூஸிலாந்து தரப்பில் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் சவுதி 3 விக்கெட்டுகளையும் ஹென்றி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட தொடர் நாயகனாக ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டார். 2 போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து அட்டகாசமாக சமன் செய்தது.


 

Comments