கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூரில் இருந்து விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்


மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், காவிரியில் வெள்ளம்கரைபுரண்டு ஓடுவதால் கரையோரங்களில் உள்ள 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால்மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 16-ம் தேதி அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை

கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்தது. இந்நிலையில், மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரியாக காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 95,000 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்த நிலையில், அந்த நீர் மொத்தமும் காவிரியில் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை அணையின் நீர்வரத்து விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

இதில், அணையின் நீர் மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 97,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் உள்ளது.

காவிரியில் வெள்ள அபாயம் நீடிப்பதால் வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினர் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் நிலவரம்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மாலை 6 மணி அளவில் நீர்வரத்து 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

தொடர்ந்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.



#News #Newsupdates #Breakingnews #Todaynews #Tamilnadu #Heavyrain #Metropeoplenews #Metropeople

Click here For More Details 👇👇👇
http://metropeople.in/heavy-rains-increase-water-flow-1-20-lakh-cubic-feet-per-second-discharge-from-mettur/

Comments