திருவாரூர் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதா? - தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் கேள்வி
ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதா? என்பது குறித்து, தமிழக முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
மன்னார்குடியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுடியில் 2013-ல் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறு தோண்டும் பணி நடைபெற்றபோது தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, மக்கள் போராட்டம் நடத்தியதால் கிணறு அமைக்கும் பணிக்கு தடை விதிக்கப்பட்டது.
அதன்பின் 2014-ல் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கிணறு தோண்ட அனுமதி பெறவில்லை என்பதால் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர், 2021-ல் மீண்டும் அந்த கிணற்றை திறப்பதற்கான நடவடிக்கையை ஓஎன்ஜிசி மேற்கொண்டபோது, அனுமதி பெறாமல் பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த கிணறை நிரந்தரமாக மூட ஓஎன்ஜிசி நிர்வாகம் ஒப்புக் கொண்டது.
இந்நிலையில், பெரியக்குடியில் ஓஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, சேந்தமங்கலம் ஊராட்சித் தலைவர் எஸ்.எஸ்.டி.கணேஷ், நில உரிமையாளர் தமீம் அன்சாரி மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 5 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் கீர்த்தனாவிடம் மனு அளித்துள்ளோம்.
2020-ல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, 2016-க்கு முன் அனுமதிபெற்ற கிணறுகள் தவிர்த்து காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்ட கிணறுகளை திறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவன பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெரியக்குடியில் மீண்டும் கிணறு அமைக்க ஆலோசனைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
அங்கு கிணறு அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இதனிடையே நேற்று நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment