செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு: சத்துணவுத் தயாரிப்பையும் சரிபார்த்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம், பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.10.2021) விழுப்புரம் மாவட்டம், முதலியார் குப்பத்தில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகச் செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தில் உள்ள பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு முதல்வரிடம், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெர்னாஸ் ஜான், இப்பள்ளியில் மொத்தம் 488 மாணவர்கள் படித்து வருவதாகவும், தற்போது 9 முதல் 12ஆம் வரையிலான வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும், மாணாக்கர்கள் வருகை சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், வகுப்பறைகளுக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களிடம் உரையாடினார். கல்வியில் மிகுந்த கவனம் செலுத்துவதோடு, ஆசிரியர்கள், மாணாக்கர்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
பின்னர், பள்ளியின் அனைத்து வகுப்பறைகள், ஆய்வகம், உணவு தயாரிக்கும் கூடம் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டதோடு, மாணாக்கர்களுக்கு தினசரி உணவு வழங்கும் பட்டியலில் உள்ளவாறு மதிய உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment