அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''திமுக அரசு மிகவும் அவசரப்படுகின்றது. எதிர்க்கட்சிகள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொண்டு, அவற்றை அழிக்கவேண்டுமென நினைக்கிறது. அது நடக்காது. அரசியல் நாகரிகத்துடன் பேசவேண்டும். நடந்துகொள்ள வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் திமுகவின் அத்துமீறிய செயல்களால் அதிமுகவின் வெற்றிகள் பல்வேறு இடங்களில் மறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக அரசுக்கு அதிமுக ஆறு மாத காலம் அவகாசம் கொடுத்து இருந்தது. இனியும் அதிமுக அரசின் திட்டங்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் திமுக செயல்பட்டால் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படும். அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்தது. மாநிலம் அமைதிப் பூங்காவாகச் செயல்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் தமிழகத்தில் பின்னடைவு ஏற்பட்டது. மீண்டும் அதனை அதிமுக அரசு சரிசெய்தது. அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மத்திய மாநில அரசுகளுக்குப் பொறுப்பு உள்ளது. இரண்டு அரசுகளும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்க வேண்டும். பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. அதனைச் சரிசெய்ய இரண்டு அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.
Comments
Post a Comment