போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோலா பாட்டியை அகற்றக் கூறியதைப் போன்று, ஆஸ்திரேலிய கிரிக்கெட் டேவிட் வார்னரும் நேற்று தன் மேஜையின் மீதிருந்த கோலா பாட்டியை அகற்றினார்.
ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் அதை தானே வைத்துவிட்டார். அப்போது அங்கிருந்தவர்களிடம் “ நான் இதை திரும்ப வைக்கவேண்டுமா?” என்று சிரி்த்துக்கொண்டே கேட்டார்.
கடந்த ஜூன் மாதம் நடந்த யூரோ-2020 கால்பந்துப் போட்டியில் ஹங்கேரி அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரொனால்டோ பேசினார். அவர் பேச்சைத் தொடங்கும்முன் தன் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த கோகோ-கோலா பாட்டில்களை நீக்குமாறு உத்தரவி்ட்டு, தண்ணீரைக் குடியுங்கள் என்று ரொனால்டோ தெரிவித்தார்.
ரொனால்டோவின் இந்த செயலுக்குப்பின் உலகளவில் கோகோ-கோலாவின் பங்குகள் பங்குச்சந்தையில் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன, ஏறக்குறைய. 520 கோடி டாலர்கள் கோலா நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது.
அதன்பின் கோலா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுத்து குடிக்கலாம். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சுவை, தேவை இருக்கிறது” எனத் தெரிவித்தது.
இந்நிலையில் இதேபோன்ற சம்பவம் நேற்று டி20உலகக் கோப்பைப் போட்டியிலும் நிகழ்ந்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. நீண்டகாலமாக பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் 65 ரன்கள் அடித்து ஃபார்முக்குத் திரும்பினார்.
இதையடுத்து, வார்னர் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது வார்னர் முன்பு இருந்த மேஜையின் தண்ணீர் பாட்டில்களும், கோகோ-கோலா பாட்டில்களும் வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த வார்னர், இரு கோலா பாட்டில்களையும் எடுத்து மேஜையின் கீழ் கொண்டு வைத்தார்.
இதைப் பார்த்த உதவியாளர் விரைந்து அந்த பாட்டில்களை பெற முயன்றார் .அப்போது வார்னர், பத்திரியாளர்களிடம், “ இந்த பாட்டில்களை நான் திரும்ப வைக்க வேண்டுமா” எனசிரித்துக்கொண்டே கேட்டார்.
பின்னர் மேஜையின் மீது மீண்டும் கோலா பாட்டில்களை வைத்த வார்னர், “ ரொனால்டோவுக்கு போதுமானதாக இருந்தால் எனக்கும் போதுமானதுதான்” எனத் தெரிவித்தார்.
ஆனால், ரொனால்டோ கூறியதைப் போன்று தண்ணீர் குடியுங்கள் என்று வார்னர் ஏதும் சொல்லவில்லை. கோலா பாட்டில்களை நீக்கிய வார்னர், மீண்டும் அதை திரும்ப வைத்ததை நெட்டிஸன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment