இனி பேட்டரி ஸ்கூட்டர்களுக்கு பொற்காலம்!


உலகின் மிகப் பெரிய பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் திறக்க இருப்பதும், அந்நிறுவனத்தின் பேட்டரி ஸ்கூட்டர் அறிவிப்பைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் 1 லட்சம் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் நமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறது: இந்தியாவில் பேட்டரி வாகனச் சந்தை மிகப் பெரிய அளவில் விரிவடையத் தொடங்கியிருக்கிறது. முன்பு பேட்டரி வாகனங்கள் மீது ஆர்வம் காட்டாமல், எதிர்மறையாக பார்த்தவர்கள்கூட தற்போது பேட்டரி வாகனங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களை விடவும், பேட்டரி ஸ்கூட்டருக்கான சந்தை பெரிய அளவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் இரு சக்கர பேட்டரி வாகனங்களின் விற்பனை 7 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் 2015-16ம் நிதி ஆண்டில் விற்பனையான இரு சக்கர பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை 20,000. அது 2020-21ம் நிதி ஆண்டில் 1,43,837-ஆக உயர்ந்துள்ளது.

2020-21ம் நிதி ஆண்டின் நிலவரப்படி இந்தியாவில் இருசக்கர பேட்டரி வாகனங்களுக்கான சந்தை 0.8 சதவீதமாக உள்ளது. 2024-25ல் அது 12.8 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் டெலிவரி நிறுவனங்கள், வாகன சேவை வழங்கும் நிறுவனங்கள், சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் பயன்பாட்டுக்கு பேட்டரி வாகனங்
களை சிறந்த தேர்வாக பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. இந்நிறுவனங்கள் மூலமாக மட்டும் பேட்டரி வாகனங்களுக்கான தேவை 15-30 சதவீதம் அதிகரிக்கும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறையும் செலவு

மத்திய அரசு பேட்டரி வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பின் பொருட்டு பேட்டரி வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டாலும், தற்போது பேட்டரி வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதற்குப் பின்னால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலான காரணமும் உள்ளது. பேட்டரியில் இயங்கும் வாகனத்திற்கு ஒருவர் செலவிடும் மொத்தத் தொகையானது (வாகனத்தின் விலை, பராமரிப்புச் செலவு, பயன்பாட்டுச் செலவு) பெட்ரோலில் இயங்கும் வாகனத்திற்கு செலவிடும் மொத்தத் தொகையைவிட 20 சதவீதம் வரையில் குறைவு என்று கூறப்படுகிறது. தற்போது பெட்ரோலின் விலை நிலவரம் மக்களை பேட்டரி வாகனம் நோக்கித் தள்ளுகிறது.

பேட்டரி வாகனத்தின் தயாரிப்புச் செலவைப் பொருத்தவரையில் பேட்டரியின் பங்குதான் அதிகம். கிட்டத்தட்ட வாகன தயாரிப்புச் செலவில் 40 சதவீதம் பேட்டரிக்கான செலவுதான். தற்போது பேட்டரி உற்பத்தி அதிகரித்து இருப்பதால் வாகனத்தின் விலையும் குறையத் தொடங்கியிருக்கிறது. 2010ம் ஆண்டில் ஒருகிலோவாட்ஹவர் லித்தியம் பேட்டரியின் விலை 1,100 டாலராக இருந்தது. 2020ல் அது 137 டாலராக குறைந்துள்ளது. அதாவது லித்தியம் பேட்டரியின் விலை 2010-ல் இருந்ததை விட தற்போது 89 சதவீதம் குறைந்துள்ளது. வாகன விற்பனை அதிகரிக்க அதிகரிக்க அதற்கான தயாரிப்பு செலவும் குறையும். அந்தவகையில் பேட்டரி வாகனங்களின் விலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போது இருப்பதைவிட பல மடங்கு குறையும் என்று கூறப்படுகிறது.

பொருளாதாரப் போக்கில் தாக்கம்

உலகளாவிய அளவில் பேட்டரி வாகனச் சந்தையில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது. காரணம், உலகளாவிய பேட்டரித் தயாரிப்பில் சீனா 72.5 சதவீதம் அளவில் பங்கு வகிக்கிறது. அந்தவகையில் இந்த வாகனச் சந்தையை தீர்மானிக்கக்கூடிய நாடாக சீனா உள்ளது. பரிசோதனை முயற்சியாக தொடங்கப்பட்ட பேட்டரி வாகனத் தயாரிப்பு தற்போது வாகனச் சந்தையை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக மாறியிருக்கிறது. உலக நாடுகள் பேட்டரி வாகனத்தை நோக்கிய நகர்வை தீவிரப்படுத்தியுள்ளன. இது எண்ணெய் வளத்தை நம்பியிருக்கும் நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து பேட்டரி வாகனங்களை நோக்கி நகர்வது என்பது வாகனச் சந்தையில் மட்டுமல்ல, உலகின் அரசியல், பொருளாதாரப் போக்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.


 

Comments